புலிகளின் முன்னாள் போராளிகள் 8000 பேர் கனடாவில் தஞ்சம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 8000 பேர் கனடாவில் தஞ்சமடைந்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் முன்னாள் புலிப் போராளிகள் 8000 பேர் வாழ்ந்து வருவதாகவும் இதில் 2000 பேர் முன்னாள் புலித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எனவும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இவ்வளவு தொகை முன்னாள் புலிப் போராளிகள் உள்ளனர் என்பதனை முதல் தடவையாக அந்நாட்டு பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
புலிகளின் கப்பல் பிரிவு பொறுப்பாளரும் கனடாவில் சரணாகதி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரை கைது செய்யுமாறு வவுனியா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், கனேடிய அரசாங்கம் குறித்த புலிப் போராளியை இலங்கையிடம் ஒப்படைப்பதனை நிராகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையிலிருந்து கனடாவிற்கு சென்றுள்ள புலிப் போராளிகள் தங்களது ஆள் அடையாள விபரங்களை மாற்றிக் கொண்டுள்ளதாக ரொரன்டோ தகவல்கள் தெரிவிப்பதாக திவயின மேலும் தெரிவித்துள்ளது.
காணாமல் போனோர் காரியாலயம் இதுவரையில் கனடாவில் வாழ்ந்து வரும் புலிகள் பற்றிய விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.