‘அவதாரம்’ தயாரிப்பில் உருவான, Your Destination என்ற பெயரில் அமைந்த குறும்படத்தினை, ‘அவதாரம்’ குழுவைச் சேர்ந்த சதா பிரணவன் நேற்று அனுப்பியிருந்தார். இது பொதுவெளியில் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதால் எனது பார்வைக்கு மட்டுமென்று குறிப்பிட்டிருந்தார். இக் குறும்படம் பற்றி எழுத முடியுமா என்றும் கேட்டிருந்தார். பொதுவெளியில் அதிகம் அறியப்படாத ஒரு முயற்சி பற்றிப் பொதுவெளியில் கருத்துரைப்பதில் சில காரணங்களால் எனக்குத் தயக்கம் இருந்தாலும், அண்மையில் பிரான்சில் நடந்த நாவலர் குறும் திரைப்பட விழாவில் இம் முயற்சிக்கு Best Director விருது அறிவிக்கப்பட்டிருப்பதாலும் சிலரது பார்வைக்கு இது வந்துவிட்டதாலும் ‘பொது நன்மை’ கருதிச் சில விடையங்களைப் பதிவு செய்கிறேன்.
‘ஈழ சினமா’வில் குறிப்பிடத்தகுந்த வகையில் அல்லது ஆரோக்கியமான திசையில் அடியெடுத்துவைக்கும் லெனின் எம். சிவம், சதா பிரணவன், இளங்கோ ராம், மதி சுதா, விஜிதன் சொக்கா போன்றவர்கள், கற்றுக்கொள்வதிலும் பிறர் கருத்துக்களை அறிவதிலும் ஆர்வமாக உள்ளவர்கள். நட்பிலும் அன்பிலும் என்னுடன் தொடர்பவர்கள். தேடலுடன் தொடரும் அத்தகையவர்களின் பயணத்தைத் தொடரும் வகையில் நான் எப்போதும் ஊக்கப்படுத்துபவனாக இருக்கிறேன். ஒரு ‘சக பயணியாக’ என்றும் அவர்களோடு தொடர்கிறேன். (இளங்கோ ராம், தனது ‘மௌன விழித்துளிகள்’ என்ற குறும்படத்தினை முன்னர் எனக்கு அனுப்பியிருந்தார். அதற்கு ஒரு விமர்சனம் எழுதுமாறும் கேட்டிருந்தார். அந்த நேரம் அதை எழுத முடியாமல் போய்விட்டது. பிறிதொரு நேரத்தில் அதனைத் திரும்பவும் பார்த்து என் விமர்சனத்தை எழுத வேண்டும்.)
நீண்ட காலமாக, ஈழ சினமா சார்ந்து பலதரப்பட்ட செயல்களைச் செய்து வந்திருப்பதால் சிலர் என்னை ‘ஈழ சினமா செயற்பாட்டாளர்’ என்று அழைப்பதும், சிலர் தமது சினமா சார்ந்த முயற்சிகளுக்கு ஆலோசனைகள் அல்லது கருத்துக்கள்,விமர்சனங்கள் எதிர்பார்ப்பதும் எனக்குச் சில சமயங்களில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், எனக்கு மிகவும் பிடித்த, சினமா என்னும் கலையோடு நான் இருக்கிறேன் என்ற சந்தோசத்தையும் வெளிப்பாடுகளில் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன.
ஒரு கலைத்துறை சார்ந்த முயற்சி தொடர்பிலான எனது கருத்துக்கள் அல்லது விமர்சனங்கள் எப்போதும் அக் கலைத்துறை சார்ந்த ஆரோக்கியமான வளர்ச்சி நோக்கியதாகவும் அதன் சமூகப் பெறுமானம் குறித்த அக்கறைகளோடும் ஆழ்ந்த சுய தேடலின், அனுபவத்தின் பாற்பட்டதாகவுமே எப்போதும் இருக்கும். அந்த வகையில் ஈழ சினமா தொடர்பிலான எனது செயற்பாடுகள் ஆக்கபூர்வமான விமர்சனம் (constructive criticism) சார்ந்தவை. ஆக்கபூர்வமற்ற அழித்தொழிப்பு விமர்சனம் (destructive criticism) சார்ந்தவையல்ல. கலை இலக்கிய நண்பர்கள் சிலரின் புரிதலுக்காக இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நேரடியாக அல்லது எழுத்துமூலமாக நான் முன்வைக்கும் சில விமர்சனங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத சந்தர்ப்பங்கள் சிலவும் அவ்வப்போது வாய்த்திருக்கின்றன.
Your Destination என்ற பெயரில் அமைத்த குறும்படத்தினை சதீஸ் இயக்கியிருக்கிறார். அண்மையில் பிரான்சில் நடந்த நாவலர் குறும் திரைப்பட விழாவில் Best Director விருதினைப் பெற்றிருக்கிறது. stop motion முறையில் குறுகிய நேர அளவில் காலணிகளைப் பாத்திரங்களாக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது இது. இத்தகைய உத்தியைப் பாவித்ததால் இதனைக் ‘கொப்பி’ பண்ணிய படம் என்று சிலர் சொல்கிறார்கள் என்றும் அதுபற்றியும் எனது கருத்தை அறிய ஆவலாக உள்ளதாகவும் சதா பிரணவன் தகவல் அனுப்பியிருந்தார். இது போன்ற உத்தி முறையில் காலணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படங்கள் ஏற்கெனவே தமிழ்ச் சூழலிலும் சர்வதேச மட்டத்திலும் வெளிவந்துள்ளன. அதனால் தான் இது ‘கொப்பி’ என்று பேசப்படுகிறதேயொழிய இதன் உள்ளடக்கம் அல்லது கதை, மற்றும் சொல்முறை அல்லது எடுத்துரைப்பு (narration) என்பவை வித்தியாசமானவையாகவே உள்ளன.
ஒரு ஆக்கிரமிப்புப் போரையும் போருக்குப் பின்பான நிலையினையும் இக் குறும்படம் பேச விழைகிறது. பலதரப்பட்ட காலணிகள் வாயிலாகப் பாத்திரங்களையும் கதைப் போக்கையும் கட்டமைக்க முனைகிறது. சினமாக் கலையைப் பொறுத்தவரையில், பொதுவாகவே கலைத் துறைகளைப் பொறுத்தவரையில் ‘உத்தி முறைகள்’ பொதுவானவையாகவும் பலராலும் பின்பற்றப் படுகிறவையாகவுமே இருந்து வருகின்றன. ஒரு கலையாக்கத்தின் உத்திமுறையல்ல, அதன் ஒட்டுமொத்த வெளிப்பாட்டு முறையும் உணர்வு ரீதியான தாக்கமுமே அதன் தரத்தையும் சமூகப் பெறுமானத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் இக் குறும்படத்தின் அனுபவமானது பார்வையாளர்கள் மத்தியில் எத்தகையதாக இருக்கிறது, இக் குறும்படத்தின் கலையாக்கம் எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பவை கேள்விகளுக்குரியவை. தொழில்நுட்ப ரீதியிலான உழைப்பு மட்டுமே கலையாக்கத்தை நிகழ்த்திவிடுவதில்லை.
நுட்பமான வகையில் தொழில் நுட்ப ரீதியான பிரயத்தனங்களோடு உருவாக்கப்பட்டிருந்தாலும், இக் குறும்படத்தின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடில் ஒரு வித செயற்கைத்தனம் துருத்தலாகத் தென்படுவதற்கு, இதன் stop motion உத்திமுறையும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். இக் குறும்படத்தின் திரைக்கதையமைப்பில், சட்டக அமைப்பில் (composition), காட்சிப்படுத்திய விதத்தில், இசையமைப்பில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
stop motion போன்ற, தொழில் நுட்பத்திலேயே அதிகமதிகம் தங்கியிருக்கும் உத்தி முறைகள் கொண்ட முயற்சிகள், கொஞ்சம் சறுக்கினாலும் முழு உழைப்பையும் சொதப்பலாக்கி, சிறுபிள்ளைகள் ‘விளையாடும்’ பொம்மலாட்டம் போல மாறிவிடக் கூடியன. நிலையான ஒருபக்க மேடையில் நிகழ்த்தப்படும் செயற்கையான அல்லது வலிந்து கட்டமைகிற ‘நவீன நாடகத்தைப்’ பார்த்தது போன்ற உணர்வையே இத்தகைய முயற்சிகள் பலவும் என்னுள் தோற்றுவித்துள்ளன. எத்தகைய உத்திமுறைகளானாலும் அவற்றின் உச்ச பட்ச வெளிப்பாட்டுச் சாத்தியங்கள் பிரக்ஞை பூர்வமாக, உணர்வுபூர்வமாகக் கையாளப்படும் போது மட்டுமே கலை சாத்தியமாகிறது. ஒரு கருத்து அல்லது உணர்வு சொல்லப்படுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட வடிவத்தினை அல்லது சாதனத்தினை நாம் எதற்காகக் கையிலெடுக்கிறோம் என்று நாம் சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட வடிவத்தின் அல்லது சாதனத்தின் தனித்துவமான, உச்சபட்ச வெளிப்பாட்டுச் சாத்தியங்கள் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டும். புதிய தொழில் நுட்ப ரீதியான முயற்சிகளில் ஈடுபடும் போது, அவற்றின் கலையாக்கம் பற்றிய அக்கறைகள் வேண்டும் நமக்கு.
தொழில் நுட்ப வசதிகள் பலவும் கொண்ட இக் காலத்தில், எத்தகைய அபத்தமான கற்பனைகளையும் சர்வதேச ரீதியில் எல்லோராலும் காட்சிப்படுத்திவிட முடிகிறது. ஆனால் அவையெல்லாம் கலையென்று கொள்ளப்படுவதில்லை. பல ‘ஹோலிவுட்’ உற்பத்திகளை இதற்குச் சான்றாகச் சொல்ல முடியும். ஆனால் யதார்த்தத்தில் நிகழாத, நிகழ முடியாத விடையங்கள் கூட இதே தொழில் நுட்ப வல்லமைகளினூடே, பல்வேறு உத்திமுறைகளினூடே கலையாகி மிளிரும் உதாரணங்களையும் நாம் காண முடியும். இதை நான் பல இடங்களில் அடிக்கடி சொல்வதுண்டு. உத்தி முறைகள், தொழில் நுட்பம் எல்லாமுமே நமது தரிசனங்களை நிகழ்த்திக்காட்டவேண்டும். அதுதான் கலையாக்கத்தில் மிகவும் முக்கியமானது.
தேடலில் தொடர்ந்து, நல்ல கலையாக்கங்களில் தொடர்ந்தும் ஈடுபடுவோம் நண்பர்களே.