இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

Suicide-vest-ammunition-300x200கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ கண்டெடுக்கப்படவில்லை.

இது ராஜபக்சாக்களின் கோட்டையாக விளங்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கதிர்காமம் என்னும் இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 2012 பெப்ரவரி 01 அன்று ‘ஐலண்ட்’ பத்திரிகையில் பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது:

‘பாதயாத்திரிகர்கள் தங்குமிடத்தில் பழைய தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமத்திலுள்ள பாதயாத்திரிகர்கள் தங்குமிடம் ஒன்றைத் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கடந்த செவ்வாயன்று சலவை இயந்திரத்திலிருந்து தற்கொலை அங்கி ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாக உள்ளுர் காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து வெடிகுண்டு செயலிழக்கும் அணியினரால் தற்கொலை அங்கி அங்கிருந்து அகற்றப்பட்டு அதிலிருந்த வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன. இச்சலவை இயந்திரமானது ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் செவ்வாயன்று தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக பாதயாத்திரிகர்களின் ஓய்வகப் பணியாளர்கள் சிலர் உட்பட எட்டுப் பேரை சிறிலங்கா காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். இத்தற்கொலை அங்கி குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் உதவிக் காவற்துறை அத்தியட்சகர் அஜித் றொகான் தெரிவித்தார். யுத்த காலப்பகுதியிலேயே இந்த அங்கி அங்கு கொண்டு வரப்பட்டதாக காவற்துறைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்’

‘ஐலண்ட்’ பத்திரிகை மட்டுமல்லாது, அனைத்து ஊடகங்களும் கதிர்காமத்தில் இவ்வாறானதொரு தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான செய்தியை மக்கள் மத்தியில் இருட்டடிப்புச் செய்தன. இந்தச் செய்தி ஐலண்ட் பத்திரிகையின் முதன்மைப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் சிறியதொரு செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாது, புலிகள் செயற்பட்ட காலத்திலேயே இத்தற்கொலை அங்கி கதிர்காமத்தில் மறைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் சொந்த இடத்தில் அல்லது ‘அதியசத்தின் தலைநகரில்’ கண்டெடுக்கப்பட்ட போது இந்த நாட்டின் வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிவகித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் எவ்வித ஊடக மாநாட்டையும் நடத்தவில்லை. இது மட்டுமல்லாது இவ்வாறானதொரு ஊடக மாநாட்டை நடத்தி அதில் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கிவிட்டது, இதனால் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது என்ற கருத்தை இந்த அங்கி கண்டெடுக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் பீரிஸ் தெரிவிக்கவில்லை. அப்போது நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ‘புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பில் எனது அப்பாவே பொறுப்புக் கூறவேண்டும்’ எனத் தெரிவிக்கவில்லை.

விமல் வீரவன்சவும் எந்தவொரு ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு, ‘சிறிலங்கா அதிபர் பிறந்த இடத்தில் புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டனர், நாடு மிகவும் மோசமான ஆபத்தைச் சந்தித்துள்ளது’ என்ற கருத்தைத் தெரிவிக்கவில்லை. இதேபோன்ற அப்போது பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்ச இந்தச் சம்பவம் தொடர்பாக எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.

கடந்த புதன்கிழமை அதாவது யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த அங்கி 2008ம் ஆண்டு திகதியிடப்பட்ட பழைய சிங்கள செய்தித்தாள்களால் சுற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜி.எல்.பீரிஸ் மிகவும் அதிர்ச்சியடைந்திருந்தார். இவர் உடனடியாக ஊடகங்களை அழைத்து இது இந்த நாட்டின் அழிவைக் குறிக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார். தற்கொலை அங்கி வெள்ளவத்தைக்குக் கொண்டு வரப்படவிருந்தது எனவும் பீரிஸ் தெரிவித்தார்.

‘புலிப்பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளதற்கான பொறுப்பை மைத்திரி-ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என நாமல் ராஜபக்ச தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கருத்துக்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கூறப்பட்டவையாகும். தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டமையே இந்த நாட்டின் ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்தியாக அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் வவுனியா, செட்டிக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றன ஒக்ரோபர் 24, 2012 அன்று மீட்கப்பட்டன. இவற்றுள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகளும் காணப்பட்டன. வெடிகுண்டுகள் மீட்கப்பட்டமையானது புலிகள் மீண்டும் தலைதூக்கி விட்டதையே சுட்டிநிற்கின்றது என ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. பிரபாகரன் உயிருடனிருக்கும் போதே இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

கிழக்கு மாகாணத்தில் 120,000 துப்பாக்கி ரவைகள் மே 09,2014 அன்று மீட்கப்பட்டன. மார்ச் 13, 2014 அன்று சிறிலங்கா காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அதிகாரி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இவர் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. காவற்துறை அதிகாரியைச் சுட்டுக்கொன்ற புலி உறுப்பினரை உயிருடன் பிடித்துத் தந்தால் அவர்களுக்கு ரூபா ஒரு மில்லியன் அன்பளிப்பாக வழங்கப்படும் என மார்ச் 22, 2014 அன்று காவற்துறையால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டிலிருந்து மகிந்த நாட்டின் அதிபராகவும் கோத்தபாய பாதுகாப்புச் செயலராகவும் பணியாற்றிய 2014 வரையான காலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் போன்றன மிகச் சொற்ப அளவிலேயே வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் ஊடகங்களில் பொதுவான செய்திகளாக வெளியிடப்பட்டன. இவை தொடர்பாக மகிந்த, ஜி.எல், நாமல் மற்றும் விமல் போன்றோர் அறியவில்லையா?

இவ்வாறான சம்பவங்களை இவர்கள் அறிந்திருந்தும் கூட, மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுகள் உள்ளடக்கப்பட்ட அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முழு நாட்டையும் கிலிகொள்ளச் செய்வதற்கான காரணம் என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றல்ல.

நவம்பர் 26 அன்று, அதாவது பிரபாகரனின் பிறந்த தினம் அன்று, வடக்கு கிழக்கு முழுமையும் புலிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக மகிந்த தெரிவித்தார். எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் குறைந்தது ஒரு புலிக்கொடியைக் கூடக் காணமுடியவில்லை. பிரபாகரனின் பிறந்த தினமன்று கோயிலில் இடம்பெற்ற பூசைக்கு பத்திற்கும் குறைவான மக்களே சமூகம் தந்திருந்ததைப் பார்த்த மகிந்த இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. இலை விழுந்த போது வானம் இடிந்து விழுந்துவிட்டதாகக் கருதி முயல் ஓடியது போன்றே தற்போது இந்த நாட்டு மக்கள் தற்கொலை அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதானது ஆபத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் இனப்படுகொலை இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழர் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மட்டுவிலில் 16 வயது தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டார். செவ்வாயன்று இந்தச் சிறுமி சிறிலங்கா இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிச் சென்று மறவன்புலவுக் கிராமத்தில் தஞ்சம் புகுந்தார். இந்தச் சம்பவமானது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. குறித்த இராணுவ வீரனைக் கைதுசெய்வதற்கான தேடுதல் வேட்டை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர். இத்தேடுதல் நடவடிக்கையின் போது மறவன்புலவைச் சேர்ந்த 31 வயதானவரின் வீட்டைச் சோதனை செய்த இராணுவத்தினர் அங்கே வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதேவேளையில், இச்சம்பவத் தொடரை கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகங்கள் மற்றும் இந்திய, மேற்குலக அமைப்புக்கள் போன்றன தணிக்கை செய்ததுடன் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை மட்டும் கோடிட்டுக் காட்டின. 16 வயதான தமிழ்ச் சிறுமியைக் கடத்தி, பாலியல் மீறலுக்கு உட்படுத்த முயற்சித்த சிறிலங்கா இராணுவ வீரர் புதன்கிழமை அன்று கைதுசெய்யப்பட்டார். இவர் 27 வயதான சிவராசா சிவதாஸ் என அடையாளங் காணப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்கள் தயாராகிய வேளையிலேயே இது தொடர்பில் பீதியடைந்த சிறிலங்கா காவற்துறையினர் குறித்த இராணுவ வீரரைக் கைதுசெய்தனர். வெடிபொருட்களை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட 31 வயதான ஜூட் செபஸ்தியான் புதன்கிழமை அன்று கிளிநொச்சியில் வைத்து சிறிலங்கா காவற்துறையிடம் சரணடைந்தார். இவரது குடும்பத்தவர்கள் இவரது வீட்டில் சிறிலங்கா காவற்துறையால் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்தே செபஸ்தியான் தானாக சரணடைந்தார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த செபஸ்தியான் தற்போது தென்மராட்சி, மறவன்புலவில் வசித்து வருகிறார். மறவன்புலவு கிராமமானது யாழ்ப்பாணத்தின் தென்கிழக்குப் புறமாக 13 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. செபஸ்தியான் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார். ஆனால் இவர் சிறுமியைப் பாலியல் மீறல்களுக்கு உட்படுத்தப்பட்ட இராணுவ வீரரின் நண்பர் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைச் சுட்டிக்காட்டிய கொழும்பு ஊடகங்கள் இதன்மூலம் தமிழ் ஆயுதக் கிளர்ச்சி மீண்டும் செயலுருப்பெறுவதாகத் தெரிவித்தன. ஆனாலும் இந்த வெடிபொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வைக்கப்பட்டவையா அல்லது சிறிலங்கா இராணுவத்தால் சட்ட ரீதியற்ற வகையில் பாதுக்கி வைக்கப்பட்ட பொருட்களா அல்லது இராணுவப் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகிறது என்பதற்கான சாத்தியக்கூறா என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

கடந்த காலத்தில் தமிழ் ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புபட்டவர்கள் அவர்களது சமூக நற்பண்புகளுக்காக மதிக்கப்படுகின்றனர். இவர்கள் தமது சமூகத்திலோ அல்லது வேறெந்த சமூகத்திலோ பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளை மிக வன்மையாக எதிர்த்து வருகின்றனர்.

செபஸ்தியான் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து சில மணித்தியாலங்களில், மன்னார் மாவட்டம் இலுப்பைக்கடவைக் கிராமத்தில் பிறிதொரு சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் வெடிபொருட்கள் இடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று சிறிலங்கா காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தேடுதல் நடவடிக்கையானது செபஸ்தியான் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதை மன்னார் மாவட்ட காவற்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த இரும்புப் பெட்டியானது 2008 தொடக்கம் 2015 வரை சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையால் பயன்படுத்தப்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவை நிலையத்திலிருந்த மலசலகூடக் குழியிலிருந்து எடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்தப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

கைதுசெய்யப்பட்ட சிவதாஸ் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அல்ல. அண்மைய ஆண்டுகளில் சிறிலங்கா இராணுவத்தினரால் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். எனினும், இதில் பெருமளவானோர் இராணுவத்தை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். சிவதாஸ் உட்பட 193 ஆண்களும் 40 பெண்களும் மட்டுமே தற்போது சிறிலங்கா இராணுவத்தில் சேவையாற்றுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வயது குறைந்த தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டு இவர்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இனப்படுகொலைகளைப் புரிந்த சிங்கள இராணுவத் தளபதிகளின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்திலிருந்து அண்மையில் தப்பிச் சென்ற சிலர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நெற் இணையத்தில் வெளிவந்த கட்டுரையை வாசித்த போது, வடக்கில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் தீமை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புலிகளின் தலைவர்கள் தற்போது வடக்கு, கிழக்கில் வசிப்பதில்லை எனவும் ஆனால் இவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் தாங்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி வழங்கியே தமக்கான அரசியற் தஞ்சக் கோரிக்கையை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பெற்றுவருவதாகவும் சிறிலங்காவில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் தாம் தஞ்சம் புகுந்துள்ள நாடுகளில் தமக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் என புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அச்சம் அடைவதாகவும் தமிழ்நெற் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது மகிந்த, கோத்தபாய, ஜி.எல் மற்றும் விமல் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இவ்வாறான தற்கொலைக் குண்டு அங்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் போன்றன 2009-2014 வரை கண்டெடுக்கப்பட்ட போதிலும் 2015ன் பின்னர் கண்டெடுக்கப்பட்ட முதலாவது குண்டுவெடிப்பு அங்கியாக இது காணப்படுகிறது. புலிகள் அமைப்பால் ஒரு தொகுதி ஆயுதங்கள் பெப்ரவரி 2015ல் மறைத்து வைக்கப்பட்ட போதிலும், அப்போது கூட்டு எதிரணி இருக்கவில்லை. ஆகவே, இது தொடர்பாக எவரும் கதைக்கவில்லை. அப்போது இவர்கள் தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருந்தனர். இதனால் இவர்கள் தமது களவுகளை மறைப்பதற்காக தமது வாயை மூடி அமைதி காத்தனர். நுகேகொடவில் இடம்பெற்ற மகிந்த ஆதரவுப் பேரணியில் மீண்டும் அரசாங்கத்தைத் தம்வசம் கொண்டு வரலாம் என இவர்கள் நினைத்தனர். இதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது வெடிபொருட் தொகுதியாக இது காணப்படுகிறது.

தற்போது இவர்களது எண்ணங்கள் முழுமையாக வெடிகுண்டுகள் மீதே காணப்படுகின்றன. இந்த மனோநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், வெளிநாட்டுப் பயிற்சிகளைப் பெற்ற, ஐ.தே.க காலத்தில் மட்டுமல்லாது சந்திரிக்கா, மகிந்த காலத்திலும் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருந்த நிமால் லேகா போன்ற பாதுகாப்பு வல்லுனர்களின் சேவைகள் பெறப்பட வேண்டும். மீண்டும் சரத் பொன்சேகா அவரது பழைய பதவிக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதன் பின்னர் மட்டுமே இன்றும் இராணுவத்திற்குள் செயற்படும் மகிந்த விசுவாசிகளைக் களையெடுக்க முடியும்.

வழிமூலம் – சிலோன் ருடே
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
மொழியாக்கம் – நித்தியபாரதி

Copyright © 3737 Mukadu · All rights reserved · designed by Speed IT net