சற்று முன் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் இத்தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தை கலைக்க முடியாதென நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் ஜனாதிபதி மைத்திரி மாற்றத்தை கொண்டுவந்த பின்னர், நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. குறிப்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஐ.தே.க. கோரி வந்த நிலையில், கட்சி தாவல்களும் ஆரம்பமாகின.
இதனால் கட்சி உறுப்பினர்கள், பல மில்லியன் ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார்.
‘மக்கள் பிரதிநிதிகள் விலைபேசப்பட்டமை, முன்னாள் சபாநாயகரின் பாரபட்சமான செயற்பாடு மற்றும் நாடாளுமன்றில் பிரச்சினை ஏற்படுவதை தடுத்தல் என்பவையே நாடாளுமன்றத்தை கலைக்க வழிவகுத்தது’ என ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென தெரிவித்து உயர்நீதிமன்றில் பத்திற்கும் அதிகமான அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அது தொடர்பான விசாரணைகள் கடந்த 4ஆம், 5ஆம், 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இடம்பெற்றதோடு, 7ஆம் திகதி விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டன. அத்தோடு, தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீடிக்கப்பட்டது.
வழக்கின் தீர்ப்பே நாட்டின் எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய நிலையில், இன்று இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.