தோட்டத் தொழிலாளர்களினால் தொடரும் ஆர்ப்பாட்டம்!
நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வேண்டும் என கடந்த 9 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் பின் தொழிலுக்கு செல்லுமாறு பணிப்புரை விடுத்திருந்த போதிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா, பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் 8 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டவாறு தேயிலை தொழிற்சாலை முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
சம்பளம் தொடர்பில் முறையான தீர்வு எட்டப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும் வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எம்மை பணி பகிஷ்கரிப்பு செய்யுமாறு கூறிய தொழிற்சங்கங்கள் எமக்கு நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக பெற்று கொடுக்க வேண்டும். அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொள்வதுடன், தொழிற்சங்கங்களுக்காக அறவிடப்படும் சந்தாவை நாங்கள் நிறுத்தி கொள்வோம்.
மேலும், எமக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்றும் இம்முறை எம்மை ஏமாற்றுபவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை, கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்திலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போரடி தான் சம்பளம் பெற வேண்டுமா? எங்கள் சந்தா பணத்தை வாங்கிக் கொண்டு சுகபோக வாழ்க்கையை வாழும் தொழிற்சங்கங்கள் எங்களுக்கு சம்பளத்தை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.




