ஏன் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? சிவசகத்தி ஆனந்தன் விளக்கம்!
எவ்வித நிபந்தனையும் இன்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு முன்வந்தமையின் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசகத்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் எந்த தரப்பினர்களுக்கும் அதரவு வழங்கப் போவதில்லை என கட்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவித வாக்குறுதிகளும், இந்த அரசாங்கத்தின் மூன்றரை வருடத்திலும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த மகிந்த அரசாங்கத்திலும் இதே நிலைதான். தேசிய அரசியல் நெருக்கடியில் அரசியலமைப்பும், ஜனநாயகமும் மீற்பட்டுள்ளதை எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஏற்றுக் கொள்கிறது.
எனினும், கடந்த 70 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு எதனையும் வழங்கவில்லை. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சாதக தன்மையை சம்பந்தன் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், எந்த நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்தவர்கள் மூன்றரை வருடங்களாகியும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதனையும் வழங்கவில்லை.
2015ஆம் ஆண்டு எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டமை போன்று, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தையும் சம்பந்தன் தவற விடக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
14 நாடுகளின் ராஜதந்திரிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்த போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்து எதுவும் அவர் பேசவில்லை.
மாறாக அரசியலமைப்பு மீறல் மற்றும் ஜனநாயக மீறல் பற்றி மட்டுமே அவர் அங்கு பேசினார். ஆகையினாலேயே நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் நான் கலந்து கொள்ளவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.