மஹிந்த – மைத்திரி அணிக்குள் மோதல் ஆரம்பம்!
மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
”எமது கட்சியின் அரசியல் பயணம் குறித்து, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் கருத்துக் கூற முடியாது” என்ற சுதந்திரக் கட்சியின் அறிவிப்பின் ஊடாக இது உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கும் இடையே நேற்று மாலை முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,
“பதவி பறிபோனால் கூட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், சுதந்திரக் கட்சி தொடர்பிலும் சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையிலேயே, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மஹிந்த சமரசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
”ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் எமது கட்சி அல்லாத உறுப்பினர்கள் சிலரால் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
கட்சிக்கு எவ்வித அறிவித்தலையும் விடுக்காது தெரிவிக்கப்பட்ட மேற்படி கருத்துகளை ஏற்கமுடியாது.
கட்சியின் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் மத்திய குழு மற்றும் தலைமைப்பீடத்தால் எடுக்கப்படும் முடிவுகள் உரிய வகையில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருந்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர் எனக் கூறப்படும் நிலையில் இவ்வாறானதொரு அறிக்கை வெளியாகியுள்ளமை அரசியல் களத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.