சப்பாணி முதல் சபாஷ் நாயுடு வரை – கமல் இளையராஜா இணையின் இசைப்பயணம்

KAMALILAYARAJA
34 வருடங்களாக நம்மில் பலரது புத்தாண்டை இந்த இருவர் கூட்டணிதான் வாழ்த்தித் தொடங்கி வைக்கிறார்கள். ஆரம்பத்தில் வரும் புத்தாண்டு வாழ்த்து வரிக்கு அப்புறம் அந்தப் பாடலில் புதிய ஆண்டு குறித்த நம்பிக்கையூட்டும் வரிகளோ, போன ஆண்டின் துன்பங்களை மறக்கும் ஆறுதல் லாலாலாக்களோ இல்லை. இசை இசை இசை என்ற ஒன்றே ஒன்றால் உங்கள் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைத்து, வருட ஆரம்பத்தை துவங்கிவைக்கிற அந்தப் பாடல் என்னவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

1977ல் தன்னுடைய 23 வயதினிலே நடித்த, 16 வயதினிலே படத்தில்தான் இளையராஜாவுடன் கை கோர்க்கிறார் கமல். அந்தப் படத்தில், இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யும் முடிவில் கமலின் பங்கு எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை எனினும், இதே இளையராஜாவோடுதான் நம் நெடுங்கால திரைப்பயணம் இருக்கும் என்று கமலோ – vice versa – ராஜாவோ நினைத்திருக்க மாட்டார்கள்.

கமல், இளையராஜா இணைந்து கொடுத்த படப் பாடல்களை ஆராய்ந்ததில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. கடைசியாக இருவரும் கைகோர்த்த அத்தனை படங்களிலும் குறைந்தது ஒரு பாடலாவது சூப்பர் ஹிட்தான். இருவருக்குள்ளும் ஒரு இசை கெமிஸ்ட்ரி ஆரம்பம் முதலே இருந்திருக்கிறது.

’எனக்கும் ராஜாவுக்கும், வாடா போடா நட்பெல்லாம் இல்லை. ‘வாங்க போங்க’தான்’ என்று சொல்லும் கமல்ஹாசன், ராஜா இல்லாதபோது அவரைப் பற்றிக் கேட்டால், அன்பு மிகுதியால் ‘அந்தாளு இருக்காரே’ என்றுதான் பேசுவார். திரையைத்தாண்டிய நட்பின் ஆரம்பப்புள்ளி இருவருக்கும் எந்தப் படத்தில் உருவாகியிருக்கக் கூடும் என்பதை கணிப்பது மிகவும் கடினமானதாகவே இருக்கிறது.

இசை என்கிற ஒன்றைத் தாண்டி யோசித்தால், வேறெதிலும் இருவருக்கும் பொருத்தமில்லை. நாத்திகர், ஆத்திகர் என்பது உட்பட பல விஷயங்களில் நேரெதிர் கருத்துடையவராகவே இருக்கின்றனர். “அன்னக்கிளி படம் சூப்பர் ஹிட். யார்ரா இதுன்னு கவனிக்க ஆரம்பிச்சேன். ஆனா பல வருஷம் கழிச்சு, நாங்க நெருக்கமானப்பப் பார்த்தா.. காலைல நாலரை மணிக்கு பாட்டு க்ளாஸுக்குப் போய்ட்டிருந்தார். ‘ஏன்?’னு ராஜாவக் கேட்டேன். ‘பெரிய நெருப்போட வந்தேன். ஆனா இப்ப கங்குதான் இருக்கு. அதாவது அணையாம பார்த்துக்கணும்ல?’ங்கறார்” என்கிறார் கமல்.

கமலின், இன்றைய ராஜ்கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல், முதன்முதலாக தயாரித்த படம் ராஜபார்வை. அப்போது அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘ஹாசன் ப்ரதர்ஸ்’. அந்தப் படம் தயாரிக்கும்போதே, இருபது வருடங்களுக்கு மேல் திரையுலகில் இருந்திருக்கிறார் கமல். ராஜா வெறும் நான்கு வருடங்களைத்தான் கடந்திருக்கிறார். தயாரிப்பாளராய் கமல் டிக் அடித்த இசையமைப்பாளர் இளையராஜா.

அந்தப் படம் தோல்விப் படமானாலும், பாடல்கள் எவர்க்ரீன். வைரமுத்துவின் ‘அந்திமமழை பொழிகிறது’ ஆகட்டும், கண்ணதாசன் எழுதிய ‘அழகே அழகு தேவதை’ ஆகட்டும் இன்றைக்கும் திகட்டாத பாடல்கள். தன் இரண்டாவது படத்தில் எழுதிய ‘அந்திமழை’ பாடலின் ‘தாவணி விசிறிகள் வீசுகிறேன்’ வரியை கமல் சிலாகித்ததை வைரமுத்து சொல்லாத மேடைகள் குறைவு.

“ராஜா வாங்கின சாபம் ஒண்ணு இருக்கு. அவர் எல்லாப் பாட்டுமே நல்லா குடுக்கறதால பெரிசா பேசமாட்டாங்க. தன் தொழிலை நல்லா செய்ற எல்லாருக்குமே உரித்தான சாபம் அது. ‘நல்லாத்தானே இருக்கு? நல்லா இல்லைன்னாதான் பெரிசு பண்ணணும்’ன்னு பாராட்டக்கூட செய்யாம கடந்து போய்டுவாங்க” – இதுவும் கமல் ராஜா பற்றிச் சொன்னதுதான்.

படம் ஹிட்டோ, இல்லையோ கமலுக்கு என்றால் குறைந்த பட்சம் ஒரு பாடலாவது காலகாலமாக வாழும்படி அமைந்துவிடும். அதுதான் கமல் – ராஜா கூட்டணியின் ஸ்பெஷாலிட்டி.

கொஞ்சம் பெரிய பட்டியல்தான். ஆனால் பாருங்கள்.. பொறுமையாகப் பாருங்கள்.. ஒப்புக்கொள்வீர்கள்:
two

இந்தப் பட்டியலிலேயே, காக்கிச்சட்டை படத்துல ‘வானிலே தேனிலா’-வை ஏன் சொல்லல, உயர்ந்த உள்ளம் படத்துல ‘வந்தாள் மகாலக்‌ஷ்மியே’ ஏன் சொல்லல, புன்னகை மன்னன் தீம் ம்யூசிக் விட்டுட்டீங்களே, நாயகன்ல ‘நிலா அது வானத்து மேல’ என்ன ஒரு துள்ளல் பாட்டு, மைக்கேல் மதன காம ராஜன் படத்துல ‘பேரு வெச்சாலும் வைக்காமப் போனாலும்’ பாட்டை விட ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ க்ளாஸிக் பாட்டல்லவா, ஹேராம் மட்டும் என்ன? ‘இசையில் தொடங்குதம்மா’ பாட்டெல்லாம் வேற லெவல் தெரியுமா என்றெல்லாம் உரிமையாகக் கோபம் வரும். ஒவ்வொரு படத்திலும், வரையறையெல்லாம் இல்லாமல் ஒரு பாடலைக் குறிப்பிட்டிருக்கிறோம். ’அட.. சொர்க்கம் மதுவிலே.. ராஜா ம்யூசிக்கா.. கமல் படமா?’ என்று சிலரை ஆச்சர்யப்படுத்தவோ, ’அபூர்வ சகோதரர்கள்’ல ‘ராஜா கைய வெச்சா’வ விட சோகப்பாட்டுதான் குறிப்பிடுவீங்களா என்று கோபத்தைத் தூண்டவோ செய்யலாம்.

”என் படத்துக்கு யார் ம்யூசிக் போட்டாலும் ராஜாவோட பங்கு இருக்கும். குறைஞ்சது அரை மணி நேரம் ராஜா பத்திப் பேசாம ரெகார்டிங்கைத் தொடங்க மாட்டோம். சில இசையமைப்பாளர் வீட்டுக்குப் போனா பெரிசா ராஜா ப்ளோ அப் இருக்கும். எங்க போனாலும் விடமாட்றாருனு நெனைச்சுப்பேன். அவர்கிட்ட சந்தேகம் கேட்டு, விவாதம் பண்ணி, சண்டை போட்டு என் இசையறிவை வளர்த்துகிட்டேன். அதுக்கு முன்னரே அவர் பாட்டைக் கேட்டு கேள்வி ஞானத்துல இசை அறிஞ்ச, அவரோட ஏகலைவன் நான்” என்கிற கமலை பாடவைப்பதிலும் ராஜாவின் பங்கு உண்டு. ‘போட்டுவைத்த காதல் திட்டம்’ எனும் அத்த்த்தனை உச்சஸ்தாயியில் பாட வேண்டிய பாடலாகட்டும், இஞ்சி இடுப்பழகி என்று கிராமத்து ஸ்லாங்கிலான ரொமான்டிக் பாடலாகட்டும், தென்பாண்டிச் சீமையிலே பாடலின் சோகம் கலந்த தனிமையாகட்டும், ‘கண்மணி அன்போடு காதலன்’ என்று காதல் பித்தேறியவனின் பாடலாகட்டும் இளையராஜா இசையில் கமல் குரல் என்றால் லைக்ஸ் அள்ளும்.

kamalraja1
விருமாண்டி படத்தில் மெட்டைக் கொடுத்துவிட்டு, ‘நீங்களே எழுதுங்க’ என்று கமலிடம் ராஜா சொல்ல, ‘நான்லாம் முடியாது. எனக்கு மூட் செட் ஆகணும். டைரக்‌ஷன் அது இதுன்னு வேலை இருக்கறப்ப பாட்டெல்லாம் முடியாது’ என்று கமல் மறுக்கிறார். ‘ஒன்னவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ என்று சொல்லிவிட்டு, ‘இதையே மொத வரியா வெச்சுட்டு எழுதுங்களேன்’ என ராஜா சொல்ல பிறந்தது, கமலும் ஸ்ரேயா கோஷலும் பாடிய அந்தப் பாடல்.

வியாபாரம் என்கிற ஒரு விஷயம் இருக்கிறது. அது கமலையும் ராஜாவையுமே பிரிக்கும். இத்தனை சிலாகிக்கிற கமல், 1995க்கு பிறகு ஐந்து வருடங்கள் கழித்துதான் ராஜாவோடு இணைகிறார். எந்தப் படத்திற்கு தெரியுமா? ஹேராம். அந்தப் படத்தின் இசைக்கோர்ப்பு பற்றிய ஒரு விஷயம் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தப் படத்திற்கான பாடல்கள் எல்லாம், வேறொரு இசையமைப்பாளரை வைத்துப் பதிவு செய்யப்பட்டு, படமும் ஆக்கப்பட்டுவிட்டது. தன், கனவுப் படங்களில் ஒன்றான ‘ஹேராமி’ன் இசையமைப்பில், கமலுக்குத் திருப்தியில்லை. இளையராஜாவிடம் வருகிறார். பாடல்கள் மீண்டும் மெட்டமைக்கப்ப்பட்டு பதிவு செய்து, மறுபடி படமாக்கவேண்டும். எக்கச்சக்கமாக பட்ஜெட் எகிறும் என்று பயந்தபடியே அணுகுகிறார். இளையராஜாவோ, ‘அதெல்லாம் மறுபடியும் படமாக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு ஏற்கனவே படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளுக்கு, ஒத்திசைவாக (Synchronise) மெட்டமைத்து பாடலைப் பதிவு செய்து கொடுக்கிறார்.

“சிங்கம் அந்தாளு. பாட்டை கேட்டு லிப் சிங்குக்கு தகுந்த மாதிரி மெட்டு போட்டு, பாடலும் பதிவு பண்றதெல்லாம் கற்பனைல கூட நெனைச்சுப் பார்க்க முடியாது. நான் பக்கத்துல இருந்து வியந்து பார்த்தேன். இசையைக் கேட்கலாம்; ரசிக்கலாம்; அட.. இசைக்கக் கூட செய்யலாங்க. இந்தாளுக்கு இசையோட அணுவுக்குள்ள, உள்ள.. உள்ள-ன்னு போகத்தெரியுது” என்று உயரப்புகழ்கிறார் கமல்.

ஹேராமுக்குப் பிறகு பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கமல், ராஜாவோடு இணைந்தது விருமாண்டி, மும்பை எக்ஸ்ப்ரஸ் ஆகிய இரண்டு படங்கள்தான். 2005-ல் மும்பை எக்ஸ்ப்ரஸுக்குப் பிறகு பதினோரு வருடங்கள் கழித்து ‘சபாஷ் நாயுடு’வில் இணைகிறார்கள்.

‘சப்பாணி’யில் ஆரம்பித்த பயணம் ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்கிறது. வாழ்த்துகள் ராஜ்-கமல்!
விகடன்

Copyright © 6591 Mukadu · All rights reserved · designed by Speed IT net