சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்ட போது, நாடு முழுவதும் வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு இன்று (திங்கட்கிழமை) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31.10.1984ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு, கலவரம் வெடித்தன. இதில் 2800 சீக்கியர்கள் உயிரிழந்தனர். டெல்லியில் மட்டும் சுமார் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
குறித்த கலவரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கத்தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்த வழக்கின்போது, ஒருவருக்கு மரண தண்டனையும், மற்ருமொரு நபருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி பொலிஸார் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இந்தநிலையில், குறித்த வழக்க விசாரணையை சிறப்பு புலனாய்வு படையினர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி (20.11.2018) அன்று தீர்ப்பளித்த டெல்லி, கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற தபால் அதிகாரி நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தனர்.
மேலும், இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சீக்கிய கலவரத்தின் போது டெல்லியில் ஐந்து பேரை கொன்றதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஜ்ஜன் குமார் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. அதன்பின்னர், நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டு, வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.
மேலும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், சீக்கியர்கள் கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.