அரசமைப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளித்து செயற்பட வேண்டும்!
அரசமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் இன்றியே பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார்.
இப்போது, எம்மீது குற்றங்களைக் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் கூறுவது போல நாம் துரோகிகளோ குற்றவாளிகளோ அல்ல.
அவர்தான் மஹிந்த ராஜபக்ஷ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருந்தார். தன்னைக் கொலை செய்துவிடுவார் என்றும் கூறினார்.
அப்படியிருந்தும் 62 இலட்சம் மக்களுக்கு துரோகமிழைத்து, தமக்கு ஆபத்தை ஏற்படுத்திய தரப்புடனேயே கைகோர்த்துள்ளார். இதனை நாம் எவ்வாறு கூறுவது?
2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு எவ்வாறான செயற்பாடுகளை வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள். அதுவரை, அரசமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.
உண்மையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் எமது நன்றிகளைக் கூறுகிறோம். ஏனெனில், அவரது செயற்பாட்டால்தான் பிளவடைந்து இருந்த நாம் ஒன்றிணைந்துள்ளோம். இதற்காக மஹிந்தவுக்கு எமது நன்றிகள்” என முஜிபூர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.